புளியஞ்சோலையில் மகா சித்தர்களுக்கு 108 மூலிகையில் யாக பூஜை
புளியஞ்சோலையில் நடந்த சித்தர்கள் யாகவேள்வி.
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த புளியஞ்சோலையில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு 108 சங்கு பூஜைகள் மற்றும் 108 மூலிகைகள் கொண்டு யாக பூஜை நடத்தப்பட்டது. கொல்லிமலை கிழக்கு அடிவாரமான புளியஞ்சோலையில் ஸ்ரீ தாயம்மாள் சமேத அறப்பளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
இக்கோயிலில் குயின்ஸ் பெரி , இராமயோகி ஆகிய 2 சித்தர்களின் ஜீவசமாதியும் உள்ளதால், இரு ஞானிகள் ஜீவசமாதி பீடம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஆடி-18ம் நாளன்று இருஞானிகளுக்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம். உலக சித்தர்கள் திருச்சபையினர் மூலம் நடைபெறும் பூஜையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், சாதுக்கள் பலரும் ஞானிகள் குருபூஜையில் கலந்து கொள்வதால் கூட்டம் அலைமோதும்.
அதேபோல் இன்று ஆடி 18 என்பதால், இரு ஞானிகளுக்கு இரு பூஜை நடைபெற்றது. மேலும் ஸ்ரீ தாயம்மாள் உடனுறை அறப்பளீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மைக்காக 108 வலம்புரி சங்கு கொண்டு, அதில் புனித நீர் நிரப்பி, சிவலிங்க வடிவில் அமைத்து , 108 மூலிகைகளைக் கொண்டு மகா சித்தர்கள் யாகவேள்வியும் நடைபெற்றது.
முன்னதாக கோமாதா பூஜையும், அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் நடைபெற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் வழிபாட்டில் இருந்த 108 வலம்புரி சங்கில் உள்ள புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு அறப்பளீஸ்வரருக்கும் , தாயம்மாளுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து புது வஸ்திரம், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 25 சாதுக்களுக்கு வஸ்திரதானம் செய்யப்பட்டது. கொரோனா மற்றும் சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபாட்டில் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் உலக சித்தர்கள் திருச்சபை சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
புளியஞ்சோலை ஆற்றில் குளிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் புளியஞ்சோலை ஒவ்வொரு வருடமும் புதுமண தம்பதிகள் மஞ்சள் சரடு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி ஒரு சில வியாபாரிகள் மட்டுமே இருந்ததால் பலாபலங்கள், அன்னாசி பழங்கள் விற்பனை இன்றி காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu