திருச்சி என்.ஐ.டி. மாணவர் விடுதிக்கு ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா அடிக்கல்
திருச்சி என்.ஐ.டி. மாணவர் விடுதிக்கு ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
டோக்கியோ -2020 ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. இவர் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) , 'அமேதிஸ்ட்' என்ற பெயருடைய, 506 படுக்கை வசதி கொண்ட மாணவர் விடுதிக்கு இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு அல்லது விருப்பம் இருக்கும். நமக்கு மகிழ்ச்சி தரும் வேளையில் நேர்மையுடனும் ஈடுபாட்டுடனும் கூடிய கடின உழைப்பைச் செலுத்தினால் வெற்றி நிச்சயம். அதனையே நான் ஈட்டி எறிதலில் செய்தேன். தொடக்கத்தில் எனக்கு இந்த விளையாட்டினைக் குறித்து பெரிதாகத் தெரியாது. எனினும் இவ்விளையாட்டின் மீது விருப்பம் கொண்டு, கடின உழைப்பு மற்றும் முயற்சியினால் வெற்றி பெற்றேன் என்றார்.
திருச்சி என்.ஐ.டி இயக்குனர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் நீரஜ் சோப்ராவை வரவேற்று, என்.ஐ.டி திருச்சியின் செயல்பாடுகளில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். தமது கழகம் என்.ஐ.டிக்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதாகவும், தற்போது நீரஜ் அவர்களின் இருப்பு, இன்னும் நிறைய மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்றார்.
என்.ஐ.டி. மாணவர் நலன் துறை முதல்வர் முனைவர் ந.குமரேசன் வரவேற்புரையாற்றினார். மாணவர் மன்றத் தலைவர், மாதவ் அகர்வால் நன்றியுரையாற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu