திருச்சி என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் சி.ஐ.ஐ. தலைவர் பங்கேற்பு
திருச்சி என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவருக்கு இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் பட்டம் வழங்கினார்.
திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தின் (என்.ஐ.டி) பதினேழாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரும்,இந்திய தொழில்நிறுவனக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தலைவருமான டி.வி. நரேந்திரன் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழாஉரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கற்றலுக்கு முடிவே இல்லை; ஒருவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் தங்கள் கனவுகளைத் தொடரவேண்டும். மாணவர்கள் உறவுகளை கட்டமைக்கவும்,வளர்க்கவும்,அவைகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வேண்டும்
நான் திருச்சி ஆர்.ஈ.சி யின் முன்னாள் மாணவன். இக்கல்லூரி தான் என்னை வடிவமைத்தது என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.வாழ்வைப் பாதிக்கும், உலகில் நிகழும் பெருமாற்றங்கள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமீப காலத்திய குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றான ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வளர்ச்சியைப் பார்க்கையில் அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியா உலக அளவில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
என்.ஐ.டி திருச்சி நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட் தலைமையுரை ஆற்றுகையில் பெருந்தொற்றுக் காலத்தில், குறைவான நேரடி தொடர்போடு, தங்கள் கல்வியைத் விடாமுயற்சியுடன் தொடர்ந்துத், தேர்ச்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார். தடுப்பூசிகளின் வடிவில் முன்னெடுக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு நன்றி தெரிவித்து, விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று அவர் நம்புவதாகக் கூறினார். கழகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க, கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடர, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் என்.ஐ.டி களில் என்.ஐ.டி திருச்சி முதலிடம் பிடித்திருப்பதற்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
என்.ஐ.டி திருச்சி இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ், தலைமை விருந்தினர் மற்றும் நிர்வாகக் குழுவின் தலைவரை வரவேற்றுத், தனது அறிக்கையை வழங்கினார். அவர் பேசுகையில் மூலோபாயத் திட்டம் 2019-24, செயல்படுத்தப்பட்டதன் எதிரொலியாகக் என்.ஐ.டி. அடைந்துள்ள ஒட்டுமொத்த வளர்ச்சி, சமீபத்திய என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் வெளிப்படுவதாகக் கோடிட்டுக் காட்டினார். என்.ஐ.டி திருச்சி, தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக அனைத்து என்.ஐ.டிகளிலும் முதலிடத்தைத் தக்கவைத்து, அதன் ஒட்டுமொத்தத் தரவரிசையை 23 ஆக உயர்த்தியுள்ளது என்றார்.
முன்னதாக இயந்திரப் பொறியியல் மற்றும் உலோகவியல் மற்றும் மூலப்பொருட்கள் பொறியியல் துறைகளுக்கான இணைப்புக்கட்டிடங்களுக்கு , இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ், முனைவர் ஏ ஆர் வீரப்பன், முனைவர் பி ரவிசங்கர் மற்றும் திரு சி கே வர்மா முன்னிலையில் திரு.டி.வி நரேந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu