நகர்ப்புற தேர்தலை புறக்கணிக்க திருச்சி ஜே.கே. நகர் பகுதி மக்கள் முடிவு
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க கூட்டத்தில் சங்க தலைவர் திருஞானம் பேசினார்.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் புதிய எண் 61 வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர்.இப் பகுதி மக்கள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பெரு மழையின் போது கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொட்டப்பட்டு குளத்து நீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்ததால் பல வீடுகள் தெருக்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் புகுந்த வீடுகளில் வசித்த மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளி இடங்களில் குடியேறினர். மழை விட்டு இரண்டு மாதங்களாகியும் இன்னும் ஜே. கே. நகரில் சில தெருக்கள் நீரால் சூழப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் அவசர நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை சங்க தலைவர் திருஞானம் தலைமையிலும் செயலாளர் சங்கர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- திருச்சி கொட்டப்பட்டு குளத்து நீரை முழுமையாக வெளியேற்ற மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவின்படி நீர்வழி பாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கொட்டப்பட்டு குளத்தின் உபரி நீரை அதன் வடிகால் பகுதிக்கு அனுப்பாத மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது .அதன் பின்னரும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை என்றால் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது என்ற தீர்மானம் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu