திருச்சி படைக்கல தொழிற்சாலை காணொலி விழாவை தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு

திருச்சி படைக்கல தொழிற்சாலை காணொலி விழாவை தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு
X

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை  பெயர் மாற்றத்துடன் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பெயரை மாற்றி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவை தொழிற்சங்கங்கள் புறக்கணித்தனர்.

இந்திய ராணுவம் மற்றும் காவல் துறைக்கு தேவையான துப்பாக்கிகள், வெடி மருந்துகள் ஆகியவை இதுகாலம் வரை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் செயல்பட்டுவந்த ஓ.எப்.டி எனும் படைக்கல வாரியம் வழியே இந்தியாவில் 41 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன.

அண்மையில் தொழிற்சாலைகள் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் 41 தொழிற்சாலைகளும் 7 நிர்வாகப் பிரிவின் கீழ் பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றியமைக்கப்பட்டன.

அதன்படி திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியில் இயங்கி வந்த துப்பாக்கி தொழிற்சாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தலைமையகமாகக் கொண்டு எ. டபிள்யூ .இ.ஐ.எ. என்றும் எச்.இ.பி.எப். தொழிற்சாலை புனே நகரை தலைமையகமாக கொண்டு எம். ஐ. எல். என்றும் மாற்றி அமைக்கப்பட்டது.

இரண்டு நிறுவனங்களையும் பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.விழாவிற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலை வகித்தார்.

காணொலி காட்சி மூலம் இந்த விழா தொழிற்சாலைகளில் நடைபெற்றது. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு ஆலையின் கூடுதல் பொது மேலாளர் மற்றும் பொறுப்பு பொது மேலாளருமான ராஜிவ் ஜெயின் தலைமை வகித்தார்.

கூடுதல் பொதுமேலாளர் ஏ.கே.சிங், இணை பொது மேலாளர் குணசேகரன், தரகட்டுபாடு அலுவலர் சுதாகர்ராஜ் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

ஆலையின் தொழிற்சங்கங்கள் யாரும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதே போல் எச். இ. பி. எஃப். தொழிற்சாலை வளாகத்தில் ஆய்வு மாளிகையில் நடந்த விழாவிற்கு ஆலையின் பொது மேலாளர் சஞ்சய் குமார் சின்கா தலைமை தாங்கினார். இதில் உதவி பொது மேலாளர் எஸ். ஏ. என் .மூர்த்தி, இணை பொது மேலாளர்கள் செல்லப்பாண்டி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவையும் இங்குள்ள தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மேலும் இரண்டு தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!