ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு எப்போது?அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு எப்போது?அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
X

திருச்சி  பொன்மலை பகுதியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் அடுத்தவாரம் இறுதி செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சருமான .அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:-

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு தொடர்பான விதிமுறைகள் அடுத்தவாரம் இறுதி செய்யப்படும். முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்போம். சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முடிவு எடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பள்ளிகள் நவம்பரில் தான் திறக்கப்பட்ட நிலையில் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த ஆண்டு எப்பொழுதும்போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை விளை நிலங்களில் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்கும் பட்சத்தில்நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நவம்பர் 19-ஆம் தேதி குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தினம் அன்று சென்னையில் உள்ள பள்ளியில் நிகழ்வு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளோம்.

ஏற்கனவே அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பிறகு இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். இருந்தாலும் கோவையில் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வு காரணமாக நவம்பர் 19-ஆம் தேதி இதை வெளியிட உள்ளோம்.

மழை காரணமாக பல்வேறு அரசு பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில், ஏற்கனவே பள்ளிகளின் நிலை குறித்து கேட்டுள்ளதாகவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் இது குறித்த ஆய்வினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் அதற்கேற்றார் போல் பள்ளிகளில் உரிய வசதி மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

கோவை சின்மயா பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு செல்ல விரும்பும் எத்தனை மாணவர்களாக இருந்தாலும் அரசு பள்ளிக்கு வந்தால் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ஷேக்முஜிப் மற்றும் மாநகராட்சி ஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், பொன்மலை பகுதி கழக செயலாளர் தர்மராஜ், விவசாய தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story