திருச்சி துவாக்குடியில் எஸ்.ஐ. மீது மோதிவிட்டு சென்ற காரால் பரபரப்பு
துவாக்குடி போலீஸ் நிலையம் (பைல் படம்)
திருச்சி மாவட்டம், துவாக்குடி போலீசார் சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தகவல் ஒன்று வந்துள்ளது. அந்த தகவலில், நாகையை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஒருவர் ஓட்டி வரும், கடத்தல் கும்பலின் TN 20 EE 4779 என்ற எண் உள்ள வௌ்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று வேகமாக வருவதாகவும், அதனை மடக்கி பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பேரி கார்டு அமைத்து அந்த காரை மடக்கி பிடிக்க துவாக்குடி போலீசார் காத்திருந்தனர். இந்நிலையில் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அந்த காரை போலீசார் நிறுத்த முயன்ற போது, கார் நிற்காமல் பேரிகார்டை இடித்து தள்ளியது. கார் இடித்து தள்ளிய பேரிகார்டு மோதி அங்கு நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளார். அப்போது காரை ஓட்டி சென்ற நபர் கொன்று விடுவேன் என்று ஒரு விரலை நீட்டி கையை வெளியில் காட்டி எச்சரிக்கை செய்த படி மின்னல் வேகத்தில் திருச்சி நோக்கி சென்றுள்ளார்.
இது குறித்து துவாக்குடி போலீசார், திருச்சி மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலை தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் அலர்ட் ஆகி காத்திருந்தனர். ஆனால் திருச்சி மாநகர எல்லைக்குள் அந்த வௌ்ளை நிற ஸ்கார்பியோ கார் வரவில்லை. எனவே மாநகர எல்லைக்கு முன்பாக உள்ள ஏதேனும் வேறுபாதையில் சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலின் காரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu