தனியார் நிறுவன அலுவலகத்தை இடித்ததாக ஐ.ஓ.பி. வங்கி நிர்வாகம் மீது புகார்

தனியார் நிறுவன அலுவலகத்தை இடித்ததாக ஐ.ஓ.பி. வங்கி நிர்வாகம் மீது புகார்
X
அரியமங்கலத்தில் இடிக்கப்பட்ட தனியார் நிறுவன கட்டிடம்.
திருச்சியில் தனியார் நிறுவன அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கியதாக ஐ.ஓ.பி. வங்கி மீது புகார் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மோகன் பட்டேல்.இவர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஸ்வாஸ் நகர் பகுதியில் அசோக் வுட் ஒர்க்ஸ் என்ற பெயரில் மார்பிள், கிரானைட், டைல்ஸ் மற்றும் மர பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். 1980-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்நிறுவனமானது 5 பார்ட்னர்களை கொண்டது.

திருச்சி தில்லை நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இந்நிறுவனத்திற்கான கணக்கை தொடங்கி பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தள்ளனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.2 கோடி மட்டுமே தொழில் முதலீடு கடன் தருவதாக அறிவித்ததால், சிறந்த முறையில் இயங்கி வந்த இந்நிறுவனத்திற்கு அதிக பண பரிவர்த்தனை காரணமாக வேறு வங்கி நிறுவனங்கள் 5 கோடி வரை தொழில் கடன் தருவதாக தெரிவித்த நிலையில் வாடிக்கையாளரை இழக்க மனமின்றி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ரூ.5 கோடி வரை தொழில் கடன் தருவதாக ஒப்புதல் அளித்ததன் பேரில் சொத்து ஆவணங்களை வங்கியில் அடமானமாக அளித்திருந்தனர்.

உரிய தொழில் கடனை வங்கி நிர்வாகம் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், வேறு வங்கிக்கும் செல்ல முடியாமல் தொடர்ச்சியாக தொழில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், பணம் தருவதாக கூறி மோசடி செய்ததுடன் தொழில் முடக்கத்திற்கு காரணமான வங்கி மீது நிறுவனத்தின் சார்பில் சென்னை மதுரை (கிளையில்) உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தை வங்கியினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி விட்டதாகவும், வேறு ஒருவருக்கு தங்களுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முயன்று வருவதாக நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோகன் பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அலுவலகத்தில் 5 நிறுவனங்களுக்கு உரிய டாக்குமெண்ட், கணக்கு வழக்குகள், மற்றும் கணினி, ஏசி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதில் இருந்ததாகவும் அவற்றையும் எடுத்துச் சென்று விட்டாரர்கள் என்றும், தங்களது அலுவலகத்தை அடையாளம் தெரியாதவர்கள் அத்துமீறி நுழைந்து இடித்ததாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததோடு நிலத்திற்கு சம்பந்தமானவர் இல்லாமல், அங்கிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு நிலத்தின் உரிமையாளரான மோகன் பட்டேல் நிலத்தின் கேட்டை பூட்டும்படி போலீசார் கூறினர்.

அதன்படி மோகன் பட்டேல் இடத்தின் கேட்டை பூட்டி சென்றார்.மேலும் இரு தரப்பினரையும் விசாரணை நடத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர்.

நீண்ட காலம் பயன்பாட்டில் உள்ள அலுவலகத்தை உடைத்து தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன் தொழில் நஷ்டமாக காரணமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் தெரிவித்துக்கொண்டதோடு இது சம்பந்தமாக திருச்சி போலீஸ் கமிஷனர், திருச்சி கலெக்டர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஓட்டு அரசியலுக்கு இலவசங்கள் எனில் கடும் எதிர்ப்பு - பா.ஜ. அண்ணாமலை வெளியிட்ட பளிச் எச்சரிக்கை..!