திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா
X
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றின் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 3-வது அலை தொடங்கி விட்டது. எனவே விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனிடையே சமீபத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதுமட்டுமின்றி தேர்வையும் நேரடியாக வந்து எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30, 31-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து வந்த கல்லூரி மாணவர்கள் 527 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் இங்கு படிக்கும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 5 மாணவர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 3 மாணவர்கள், தெலுங்கானா, குஜராத்தை சேர்ந்த தலா ஒரு மாணவர் என 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சக மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!