திருச்சியில் இடி மின்னல் தாக்கி ஒரு பெண் உட்பட 2 பேர் பலி

திருச்சியில் இடி மின்னல் தாக்கி ஒரு பெண் உட்பட 2 பேர் பலி
X

மின்னல் பைல் படம்

திருவெறும்பூர் அருகே நேற்று மாலை இடியுடன் பெய்த பலத்த மழையில் இடி மின்னல் தாக்கி, இருவேறு இடங்களில் வேலை பார்த்த ஒரு பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கிளிமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் வேலாயுதம் (வயது 60) அதே பகுதியை சேர்ந்த பாண்டு மகன் சங்கர் (வயது 55) உட்பட சிலர் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை பகுதி தங்கி சம்பா ஒரு போக விவசாய நடவு பணியை தினகூலிக்கு வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த போது வேலை பார்த்தவர்கள் மழைக்காக கரையில் ஒண்டுவதற்காக வந்தபோது வேலாயுதம் மற்றும் சங்கரை இடி மின்னல் பலமாக தாக்கியது.

இதில் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சங்கர் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் இந்தலூர் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த சின்னையன் மகள் ரங்கம்மாள் (வயது 45). இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்களுடன் கிளியூர் பகுதியில் சம்பா ஒருபோக நாற்று நடும் பணிக்காக வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது இடி மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இடி மின்னல் தாக்கி 2 பேர் இறந்து போனது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலாயுதம் மற்றும் ரங்கம்மாள் ஆகியோரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் இடி தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!