காட்டூர் சாலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் வாழை மரம் நடும் போராட்டம்
காட்டூர் சாலையில் கம்யூனிஸ்டு கட்சியினர் வாழை மரம் நடும் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரவர மூடப்படாமல் உள்ளதால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாகுறிச்சியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தற்போது பெய்த மழையில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே இதனை சீரமைக்க கோரிக்கை விடுத்தும், பாரதிதாசன் நகரில் பொதுப்பாதையில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், காட்டூர் பாரத் அவன்யூவிலிருந்து அண்ணாநகர் சாலை இணைப்பு பகுதியில் உள்ள சுவரை இடித்து விட்டு அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் அகற்றி பொது பாதையாக அமைத்து தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி குழு நிர்வாகி நல்லையா தலைமை தாங்கினார்.காட்டூர் பகுதி குழு செயலாளர் கனல்கண்ணன், மாவட்ட குழு மணிமாறன், பகுதி குழு தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் கே.சி.பாண்டியன், ரேணுகா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து காட்டூர் பாப்பாக்குறிச்சி சாலையில் பேரணியாக வந்து வாழை மரங்களையும், நாற்றையும் நட்டு வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu