திருவெறும்பூர் அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் கொலையா?

திருவெறும்பூர் அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் கொலையா?
X

பாண்டியராஜன்

திருச்சி திருவெறும்பூர் அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்து உள்ளது துவாக்குடி. இங்குள்ள மேல மாங்காவனம் பகுதியில் வசிப்பவர் மாரியப்பன் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு பாண்டியராஜன் (வயது 26) பரத் என்கிற உதயகுமார் (வயது 23) ஆகிய இரு மகன்கள் உண்டு. மாரியப்பனுக்கு கோட்டரப்பட்டி ரயில்வே கேட் அருகில் வயல் மற்றும் தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மனைவி அமுதா மகன் பாண்டியராஜன் ஆகியோர் வயலில் வேலை செய்து வந்துள்ளனர்.

அப்பொழுது அருகில் ஒரு ஆடு இறந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது. இறந்து போன ஆடு கோட்டரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமானதாகும். ஆடு இறந்த சம்பவத்தை ஆடு மேய்த்து வந்த சுப்பிரமணியன் மனைவி வேம்பு சுப்பிரமணியனுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி சுப்பிரமணி தரப்பினர் ஆடு இறந்த பகுதிக்கு வந்து மாரியப்பன் தரப்பினரிடம் வாய்த்தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்து கிராம பஞ்சாயத்தில் இறந்த ஆட்டுக்கு இழப்பீடாக ரூ. 8 ஆயிரம் மாரியப்பன் தரப்பினரிடமிருந்து பெற்று சுப்பிரமணியன் தரப்புக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுதும் மாரியப்பனுக்கும் அவரது மகன் பாண்டியராஜனுக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று காலை கோட்டரப்பட்டி ரயில் தண்டவாளத்தில் பாண்டியராஜன் பிணமாக ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

தண்டவாளத்தில் கடந்த பாண்டியராஜனின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு பாண்டியராஜன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசி விட்டார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று பிரேத பரிசோதனை நடத்தி பாண்டியராஜனின் உடல் பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

தனது மகனின் இறப்புக்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாரியப்பன் தரப்பினர் ரயில்வே போலீசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!