பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேர் கைது
பைல் படம்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சுருளிகோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47). பா.ஜ.க. செயற்குழு உறுப்பினரான இவர், கல்லணை பிரிவு ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் அதற்கான பணத்தை பணபரிமாற்ற எந்திரம் (பே.டி.எம்) மூலம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் பணம் ஏறவில்லை என்று ஊழியர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ஒரு கட்டத்தில் விஜயகுமார், தனது கட்சி நிர்வாகி பூக்கடை சிவா, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய மண்டல் தலைவர் சக்திவேலுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பெட்ரோல் பங்க் மேலாளர் சிவனேசனை, ஊழியர்கள் மீட்டு, அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் விஜயகுமார் மற்றும் பூக்கடை சிவா, சக்திவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu