திருச்சியில் அடிப்படை வசதி இன்றி தவிக்கும் ஏ. ஆர். கே. நகர் பகுதி மக்கள்
திருச்சி அரியமங்கலம் அருகே உள்ளது பனையகுறிச்சி ஊராட்சி. இங்குள்ள ஏ.ஆர்.கே. நகரில் சாலை வசதி இல்லை. தெருவிளக்குகள் எரியாமல் சாக்கடையில் குப்பைகள் அள்ளப்படாமல் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சீர்கெட்டு உள்ளது. மேலும் சாலை ஓரங்களில் இருபுறமும் சமுக விரோத செயல்களுக்கு இருப்பிடமாக உள்ளது.
திருச்சி மாநகரை ஒட்டிய திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகரின் அருகே உள்ள இந்த பகுதியே இரவு நேரங்களில் இருட்டாகவே இருப்பது திருநங்கைகளுக்கு வசதியாக உள்ளது. இரவு நேரத்தில் இங்குள்ள பாலம்பகுதியில் திருநங்கைகள் நின்று கொண்டு இந்த வழியாக வருவோரை வலுகட்டாயமாக இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று பணம் பறித்து விடுகின்றனர். திருநங்கைகள் என்பதால் ரோந்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. காவிரிக்கரையின் மிக அருகில் இருக்கும் இந்த நகருக்கு இதுவரை காவேரி குடிநீர் கிடைக்காமல், சாக்கடை அள்ளப்படாமல், கரடு, முரடான குண்டும், குழியுமான சாலை தான் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பகலிலேயே தடுமாறுகின்றனர்.
சிறுமழை பெய்தாலே, மழைநீர் தேங்கி குளம்போல் நிற்கிறது. குடிநீரும் சரியாக கிடைப்பதில்லை. மாலை 6 மணி ஆகிவிட்டாலே இப்பகுதியே கும்மிருட்டாகி விடுகிறது. இந்த இரவு நேரங்களில் திருநங்கைகள் தொல்லைகள் ஆரம்பமாகி விடுகிறது. பல சமுக குற்றங்கள்நடந்தும், இந்த இடம் இருட்டாக இருப்பதால் போலீஸ் கூட இங்கு வர பயப்படுகின்றனர் என அந்த பகுதிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
இங்கு விபரீதம் ஏதும் நிகழ்வதற்குள் இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சமுக விரோத செயல்கள் நடக்காமல் நிரந்தரமாய் இங்கு போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த பகுதி பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொகுதியான திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வருகிறது. அடிப்படை பிரச்சனைகள் குறித்து பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் அதை சரி செய்ய தயக்கம் காட்டுகின்றனர் என்றே பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருவெறும்பூர் தொகுதியை தன்னிறைவான தொகுதியாக மாற்றி, தொடர்ந்து இரண்டாவது முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று பள்ளிகல்விதுறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியாக இருந்தும் எவ்வித அடிப்படை வசதியும் இங்கு வராதது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் இல்லாமல் சீரழிந்து போகும் நிலையில் உள்ள இந்த ஏ.ஆர்.கே. நகரை சீரமைத்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வாரா? தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுப்பாரா? என்பதே இங்கு வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu