ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் வஸ்திர மரியாதை
திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது. கி.பி.1320-ல் ஸ்ரீரங்கத்தில் நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார்.
இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் இக்கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன.
திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்தவகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று (14-ந்தேதி) இரவு கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
இன்று (15-ந்தேதி) ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திருப்பதி வஸ்திர மரியாதை காலை 7 மணிக்கு புறப்பட்டு வீதிஉலா வந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இருந்து வஸ்திரமரியாதையை கருடாழ்வார் மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu