திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் தை தெப்பத் திருவிழா துவக்கம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் தை தெப்பத் திருவிழா துவக்கம்
X

 தெப்பத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் தை தெப்பத் திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீரால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந்த விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதியுலா வருவர். ஆனால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைத்தெப்ப உற்சவத்தின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) இரவு சுவாமி வெள்ளி மஞ்சத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், நாளை இரவு சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்திலும், 10-ந்தேதி இரவு சுவாமி கைலாசநாதர் வாகனத்திலும், அம்மன் அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 16-ந்தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், இரவு சுவாமி யாழி வாகனத்தில், அம்மன் புலிவாகனத்தில் எழுந்தருளுகின்றனர். தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்பம் மற்றும் தீர்த்தவாரி 17-ந் தேதி நடைபெறுகிறது.

ஆண்டு தோறும் தை தெப்ப திருநாளன்று மாலை திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர்.

தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் இந்தாண்டு தை தெப்ப உற்சவம் வருகிற 17-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil