திருவானைக்காவல் அகிலாண்டேவரி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடந்தது.
பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழா வரும் ஏப்ரல் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தையொட்டி முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 7.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடைபெற்ற பின்னர் காலை 7.45 மணிக்கு மீன லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி வரும் 28-ந் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 29-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 30-ந்தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 31-ந்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், ஏப்ரல் 1-ந்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 2-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
3-ந்தேதி வெள்ளிமஞ்சத்திலும், 4-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 5-ந்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
6-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மௌனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 16-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 17-ந்தேதி சாயாஅபிஷேகம், 18-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu