ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
கொடியேற்றம் காண திருச்சிவிகையில் எழுந்தருளினார் நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
தைத்தேர் உற்சவத்தின் முதல் நாளான நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு கொடிப்படம் புறப்பட்டு காலை 5.15 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பின்னர், உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இரவு 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.
தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். 15-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். 16-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் 17-ந் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியபின் தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம்வந்து பின்னர் நிலையை அடையும்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் தைத்தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 18-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu