ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழாவின் பகல் பத்து உற்சவம் இன்று தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து உற்சவம் இன்று தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து உற்சவம் இன்று தொடங்கியது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதம் 20 நாட்கள் நடக்கும் வைகுந்த ஏகாதசி விழாவின் பகல் பத்து முதல் திருநாள் இன்று (4ம் தேதி) தொடங்கியது. முன்னதாக நேற்று இரவு உற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியாக ரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகம் பகுதி பாடப்பட்டது.
20 நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் பகல்பத்து, ராப்பத்து என இரு பகுதிகளாக பிரித்துக் கூறப்படுகிறது. இதில் இன்று முதல் 13-ம் தேதி வரை பகல் பத்து எனப்படும் திருமொழித் திருநாள் நடைபெறும். இந்நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு கோயில் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் பல்வேறு வகை உயர்ந்த திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான 13-ம் தேதி உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு வரும் 14-ம் தேதி அதிகாலை நடக்கவுள்ளது. அன்று அதிகாலை 4.30 மணியளவில் நம்பெருமாள் பாண்டியன், கொண்டை, கிளிமாலை மற்றும் ரத்தின அங்கி அணிந்து கண்களை நிறைக்கும் அழகுடன் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம வாகனத்தில் புறப்படுவார். அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியே பெருமாள் வெளியில் வருவார். காலை 7.30 மணியளவில் நம் பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு இரவுவரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
உற்சவத்தின் 20 நாட்களிலும் மூலவர் ரங்கநாதருக்கு முற்றிலும் நல்முத் துக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட முத்தங்கி அணிவிக்கப்படுகிறது. இந்த முத்தங்கியில் வரும் 23-ம் தேதிவரை ரங்கநாதர் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்த விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணை யருமான மாரிமுத்து தலைமையில், அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu