ஸ்ரீரங்கம் கோயில் ஊஞ்சல் உற்சவம்:நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் கோயில் ஊஞ்சல் உற்சவம்:நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கி நாளை (1-ந் தேதி) வரை நடைபெறுகிறது.

உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ஊஞ்சல் உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஊஞ்சல் உற்சவத்தின் 7ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுனார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (1-ந்தேதி) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார்.

அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயன பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8 .45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.

Tags

Next Story
ai healthcare products