ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று வேடுபறி கண்டருளினார் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 3- ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 4- ந்தேதி பகல்பத்து உற்சவ நிகழ்ச்சி நடந்தது. பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான 13-ந்தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுந்த ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாளுக்கு திருக்கைத்தல சேவை நடைபெற்றது.
ராப்பத்து உற்சவத்தின் 8-ஆம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவ நிகழ்ச்சி கோயில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது.
அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இந்த நிகழ்ச்சியைதிரளான பக்தர்கள் பக்தி பரவசத்தோடுகண்டு நம்பெருமாளைவணங்கினார்கள்.
இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மணல்வெளி வந்தடைந்தார். அங்கு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளினார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார். அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வேடுபறி என்றால் என்ன? திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தார். இவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிதுநேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறி வைபவமாகும். வேடுபறி வைபவத்தின் ஒருபகுதி பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடத்திக்காட்டப்பட்டது. இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டன.
விழாவின் 10-ஆம் நாளான நாளை மறுநாள் (23 ந்தேதி) தீர்த்தவாரியும், 24- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் இந்தாண்டுக்கான வைகுந்த ஏகாதசி விழா நிறைவடைகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu