ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (பைல்படம்)

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று திருக்கைத்தல சேவையும் நாளை திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பூலோக வைகுந்தம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 3-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி பகல்பத்து உற்சவ விழா துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான 13-ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரமும், 14-ஆம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. தினமும் மாலை நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருக்கைத் தல சேவை நடக்கிறது. இதையொட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் வருகிறார். மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை நடக்கிறது. நம்பெருமாள் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். இரவு 11.30 மணிக்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 12.45 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.

கைத்தல சேவையையொட்டி இன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை பரமபதவாசல் திறந்திருக்கும். தொடர்ந்து நாளை (21-ம் தேதி) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 23ம் தேதி ராப்பத்து நிறைவு நாளான அன்று தீர்த்தவாரியும், 24-ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறுகிறது. நாளை (21-ம் தேதி) பரமபதவாசல் திறப்பு கிடையாது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!