ஐயப்ப பக்தரின் மூக்கை உடைத்த ஸ்ரீரங்கம் கோவில் காவலாளிகள் மூவர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் கோவில் காவலாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த 34 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நேற்று தரிசனம் செய்ய வந்துள்ளனர். இங்கு தரிசனத்தை முடித்து விட்டு சமயபுரம், திருவாணைக்காவல், உள்ளிட்ட கோயில்களுக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
வைகுண்ட ஏகாதசி துவக்க நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. நீண்டவரிசையில் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஆட்டி அசைத்ததோடு உண்டியலில் தாளமிட்டுள்ளனர். விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய அவர்கள் முயன்றதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் கோவிந்தா கோவிந்தா என கூறி கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அங்கிருந்த காவலர்கள் அவர்களிடம் அமைதியாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் மீண்டும் உண்டியலில் தாளமிட்டதையடுத்து காவலர்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், காவலர் ஒருவரின் தலை உண்டியலில் பலமாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தன்னை தள்ளிய பக்தரை பிடித்து தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். தடுமாறி விழுந்த பக்தரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து மூக்கில் வடிந்த ரத்தத்தை துடைத்தபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் காயத்ரி மண்டபத்திலே ரத்தம் சொட்டச் சொட்ட அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோபத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்து மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கோயிலுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர். இது குறித்து கோயில் காவலர் பரத் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோயில் காவலர்கள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோயில் நடை சார்த்தப்பட்டு, பரிகார பூஜைகளுக்குப் பின்னர் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அளித்த விளக்கத்தில், ஆந்திராவைச் சேர்ந்த 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்தனர். அதோடு கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளனர். கோயில் பணியாளர் தலைமுடியைப் பிடித்து உண்டியலில் மோதச் செய்துள்ளனர். மற்ற பக்தர்களைத் தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் விளக்கம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவலில் பக்தர் தாக்கப்பட்டதை கண்டித்து கோவிலுக்கு வெளியே பா.ஜ.க.வினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயில் பாதுகாவலர்களான பரத், செல்வகுமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைகுண்ட ஏகாதசி தொடக்க நாளில் ஆலய வளாகத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் ரத்தம் சிந்தியது விவாதப்பொருளானது. இதனையடுத்து கோவில் நடை சிறிது நேரம் மூடப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டது. கோவில் மூலஸ்தானம் முன்பாக கூச்சலிட்டு சத்தம் போட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பக்தர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஐயப்ப பக்தர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu