ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று ரங்கநாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று  ரங்கநாச்சியார் திருவடி சேவை
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா  ஏழாம் நாளையொட்டி இன்று தாயார் திருவடி சேவை உற்சவம் நடந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் ரங்கநாச்சியார் திருவடி சேவை இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ஆம் திருநாள் அன்று மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் (பொறுப்பு) கல்யாணி, உதவிஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!