ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்: பக்தர்கள் மத்தியில் சித்திரை தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்: பக்தர்கள் மத்தியில் சித்திரை தேரோட்டம்
X
பக்தர்கள் மத்தியில் எழுந்தருளிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்: பக்தர்கள் மத்தியில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் மத்தியில் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் வருடம் 365 நாட்களும் திருவிழா நாட்கள் தான் என்றாலும் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா, வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் தேரோட்ட விழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

அந்த வகையில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருநாள் தேரோட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இவ்விழா வருகிற 21 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும்.

விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் ஏழாம் நாளான நேற்று முன்தினம் மாலை 6:30 மணி அளவில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டறினார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். இதனை தொடர்ந்து திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

திருவிழாவின் 8 ஆம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். காலை 8 மணிக்கு ரங்க விலாச மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாழி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நம்பபெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வதால் பக்தர்கள் வீதிகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கு இனியாளில் அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4:30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார்.பின்னர் அதிகாலை 4:45 மணிக்கு நம்பருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர் காலை 9 மணி அளவில் நிலையை அடைந்தார்.


தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு இருந்த பட்டு வஸ்திரம், கிளிமாலை பாண்டியன் கொண்டை அணிந்து நம்பெருமாள் தேரில் வலம் வந்தார்.

வருகிற 20-ஆம் தேதி சப்தா வரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21ஆம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!