ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஊழல்: பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஊழல் நடந்து உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த 5-ந்தேதி நள்ளிரவு அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகபர் பாபு இன்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எச். ராஜா இன்று நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலில் 56 நிலைகள் மாற்றம் செய்யப்பட்டது. இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் முன்னாள் இணை ஆணையர் ஜெயராமனுக்கு பெரும் பங்கு உள்ளது. ஆனாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் செய்துள்ள ஜெயராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஸ்ரீரங்கம் கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்து கோவில்கள் மீது அறநிலையத்துறைக்கு அக்கறை இல்லை. ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் தாமரைக் கோலம் போட அனுமதி மறுத்த ஸ்ரீரங்கம் கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க. ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் போது கோவில்களில் உள்ள தங்கம், சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu