ஸ்ரீரங்கம் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் முன் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
ஸ்ரீரங்கம் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் முன் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் முன் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 120 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் 120 தூய்மை பணியாளர்களையும் கடந்த 31ஆம்தேதி முதல் வேலையிலிருந்து நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ678 வழங்காததை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகத்தை கண்டித்தும். 120 தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு. திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்கா. ரங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் கோவில் நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்கவோ, பேச்சுவார்த்தைக்கோ அழைக்கவில்லை. இதையடுத்து ரங்கா, ரங்கா கோபுரம் முன் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கா, ரங்கா கோபுரம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட நேற்று காலை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பணியாளர்கள் வந்தனர். இவர்களை போலீசார் பேரிகார்டுகள் கொண்டு தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து போலீசாருக்கும் சிஐடியு தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் தொழிற் சங்கத்தினர் தடுப்புகளை தாண்டி சென்று ரங்கா, ரங்கா கோபுரம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் போராட்டத்தை துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் மாறன், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிசெயலாளர் தர்மா,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதிசெயலாளர் சந்துரு, சிஐடியு நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், வெற்றிச்செல்வன், கணேசன், வீரமுத்து, ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu