பெட்டவாய்த்தலை பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை

பெட்டவாய்த்தலை பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை
பைல் படம்
திருச்சியில் இருந்து பெட்டவாய்த்தலை பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பெட்டவாய்த்தலை வரை, பள்ளி நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் போதுமான அளவு இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் அல்லூர், திருச்செந்துறை, திருப்பராய்த்துறை, பெட்டவாய்த்தலை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று வந்தனர்.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரடங்கு தளர்வு காரணமாக பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. பள்ளிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. ஆனால் சத்திரம் பஸ் நிலையம் முதல் பெட்டவாய்த்தலை வரை வந்து சென்ற அரசு டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

குறிப்பாக காலை 8.50 மணிக்கு பெட்டவாய்த்தலை வரும் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த பஸ் 9.30 மணிக்கு வருவதால் அதில் சென்றால் பள்ளிக்கு நேரமாகிவிடும் என்று கருதி காவல்காரப்பாளையம், சிறுகமணி, பெருகமணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெட்டவாய்த்தலையில் உள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சிலர் நடந்தே செல்லும் நிலை உள்ளது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை 8 மணிக்கு கடியாக்குறிச்சியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் வரை சிறப்பு அரசு டவுன்பஸ் இயங்கி வந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அந்த பஸ்சும் வருவதில்லை. இதனால் மாணவர்கள் அவ்வழியே கூட்ட நெரிசலில் வரும் பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்களை மீண்டும் இயக்கி மாணவர்கள் எளிதில் தடையின்றி பள்ளி சென்றுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story