திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழ் வளர்க்கும் இராசவேலர் செண்பகத்தமிழ் அரங்கு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழ் வளர்க்கும் இராசவேலர் செண்பகத்தமிழ் அரங்கு
X

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள இராசவேலர் செண்பகத்தமிழ் அரங்கு.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ராசவேலர் செண்பகத்தமிழ் அரங்கு ஊரடங்கு காலத்திலும் இணைய வழியில் தமிழை வளர்த்து வருகிறது.

புராண காலத்தில் மதுரையில் சங்கப்பலகை அமைத்து தமிழ் வளர்த்ததாக வரலாறு உண்டு. தஞ்சை தரணியில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் இன்றைய நூற்றாண்டில் பிரபலமான ஒன்று. அதேபோல பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாதர் பள்ளிகொள்ளும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தமிழ் வளர்த்து வருகிறது இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு. இந்த ராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கினை நடத்துபவர் ஒரு தமிழாசிரியர். இராச இளங்கோவன் என்கிற அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதோடு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் இந்த செண்பகத் தமிழ் அரங்கையும் நடத்தி வருகிறார்.

1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த செண்பக தமிழ் அரங்கு இதுவரை 1,533 சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் ஏழு முப்பது மணி வரை செண்பகத் தமிழ் அரங்கு இலக்கிய சொற்பொழிவு, ஆன்மீக சொற்பொழிவு அல்லது மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கை. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த காலத்திலும் நேரடி நிகழ்ச்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டபோதும் இணையவழியில் சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட மாலை நேரத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் இந்த அமைப்பின் தலைவரான இராச இளங்கோவன்.


இராச வேலர் செண்பகத் தமிழ் அரங்கு பற்றி இராச. இளங்கோவன் கூறுகையில் 'எனது தந்தையார் இராசவேலர் வழக்கறிஞராக பணியாற்றியதோடு தமிழ் பணியையும் செய்து வந்தார். எனது தாயார் செண்பகவல்லி. அம்மா மீது கொண்டிருந்த அளவற்ற காதல், பற்றின் காரணமாக அப்பா அம்மாவை பற்றி பத்தாயிரம் கவிதைகள் எழுதியுள்ளார். அம்மா மறைவிற்கு பிறகு அவரது நினைவாக அவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே இந்த இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு. அப்பா மறைவுக்குப் பின்னர் நான் அதனை நடத்தி வருகிறேன். எங்கள் அரங்கில் ஆன்மீக வள்ளல் பொள்ளாச்சி மகாலிங்கம், அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன், திருவாவடுதுறை திருப்பனந்தாள் ஆதீனம், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தங்கமுத்து, முத்துக்கருப்பன், மற்றும் ஊரன் அடிகள், இளங்குமரனார் என எத்தனையோ சொற்பொழிவாளர்கள் அரங்கிற்கு நேரடியாக வந்து சொற்பொழிவாற்றி இருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தையும் தாண்டி இந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் இந்திய இலக்கியங்கள் ,மேலை நாட்டு அறிஞரான சேக்ஸ்பியர் புத்தகங்கள் பற்றியும் சொற்பொழிவாற்றப் பட்டு இருக்கிறது. மதங்களை தாண்டியும் சொற்பொழிவாற்றி இருக்கிறார்கள்.

பைபிள், திருக்குர்ஆன் பற்றியும் சொற்பொழிவுகள் நடந்திருக்கிறது. அரசியல் இயக்கங்களை போன்று இந்த அமைப்பிற்கு இளைஞரணி, மகளிரணி உண்டு. தமிழ் உலக அரங்கில் வளரவேண்டும், அதன் பெருமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்' என்றார்.

இந்த வாரம் சனிக்கிழமை செண்பகத் தமிழ் அரங்கு இணையவழி கருத்தரங்கில் சண்முகநாதன் தமிழ் வளர்த்த கிறிஸ்தவர்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!