திருச்சி கொள்ளிட கரையில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய ரங்கநாதர்
சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பில் சீர்வரிசை வழங்கப்பட்டது.
திருச்சி கொள்ளிட கரையில் நடைபெற்ற கோலாகல விழாவில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுத்தார் அண்ணன் ரங்கநாதர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கை என ஐதீகமாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் தைப்பூசத் தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிட ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தைப்பூசமான நேற்று சமயபுரம் கோவிலில் இருந்து மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் கொள்ளிட கரைக்கு புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் உபயங்களைப் பெற்று நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிட கரைக்கு வந்தார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் மாரியம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டறிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வலையல்கள் ,மாலைகள் ,சந்தனம் குங்குமம், மஞ்சள் பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப் பொருட்களை அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள் ,ஸ்தலத்தார்கள் அதிகாரிகள் ,அலுவலர்கள் பணியாளர்கள் தலையில் சுமந்தும் கையில் ஏந்தியும் ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க மேளதாளம் வழங்க வான வேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர்.
அங்கு சீர்வரிசை பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் மேற்பார்வையாளர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கோவில் ஊழியர்கள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து அம்பாளுக்கு ரங்கநாதர் கோவில் பட்டு வஸ்திரம் மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப் பொருட்கள் மகா தீபாராதனை நடைபெற்றது .இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu