திருச்சி: ராமகோபாலன் நினைவிடத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அஞ்சலி
திருச்சி அருகே சீராத்தோப்பில் ராமகோபாலன் நினைவிடத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.
இந்து முன்னணி நிறுவன தலைவர் மறைந்த, ராம கோபாலனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி குழுமணி அருகில், சீராத்தோப்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில துணை தலைவர் பரமன்குறிச்சி வி.பி. ஜெயக்குமார் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை அஞ்சலி செலுத்தி விட்டு பேசியதாவது:-
சுதந்திரப் போராட்ட காலத்தில் பிறந்து பல்வேறு நல்ல விஷயங்களை சந்தித்தவர் ராம கோபாலன். 1980-இல் மீனாட்சிபுரம் பிரச்சனையின் போது மதம் மாறுவதற்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார். ஹிந்து என்பது வாழ்வியல் முறை என்று கூறியவர் ராமகோபாலன் தான். அவர் இல்லை என்றால் தமிழகம் எங்கு சென்று இருக்கும் என்று எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
ராமகோபாலன் இறந்தபோது ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார். அப்போது ராமகோபாலன் கூறிய கருத்துக்களை இல்லை என்று கூற முடியாது. ஏற்றுக்கொள்ள கூடியது தான் என்று கூறியிருந்தார். இளைஞர்கள் ராமகோபாலனின் சித்தாந்தத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவிலை திறங்கள் என்று அமைப்புகளை விட பொதுமக்கள் தான் கூறுகின்றனர்.
தமிழகத்தில் புரிதல் இல்லாமல் தான் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் குறித்து இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நாம் விளக்க முன்வரவேண்டும். ஜி.எஸ்.டி. என்ன என்றே தெரியாத எம்.பி.க்கள் இங்குதான் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu