பெருகமணி ஊராட்சி தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி புகார்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்).
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள பெருகமணி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கிருத்திகா அருண்குமார். இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவர் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலமாக மாவட்ட கலெக்டருக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.
இதனை விசாரணை செய்த மாவட்ட நிர்வாகம் பெருகமணி ஊராட்சி மன்றத்தின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்தது. இதனால் ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிருத்திகா போலி ரசீது மற்றும் பில் புத்தகம் போன்றவற்றை தனியாக தயாரித்து வரி வசூல் செய்துள்ளார் என்றும், வீட்டு வரி மற்றும் பல்வகை ரசீது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ,இந்த ரசீதில் உள்ள வரிசை எண்கள் எங்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கணக்கில் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனால் கிருத்திகா ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் கிருத்திகா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திருப்பராய்த்துறையை சேர்ந்த முத்துராஜ் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் பெருகமணி ஊராட்சியில் மீண்டும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu