ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு
X
புதிதாக திறக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் உள்ள கணினி கட்டுப்பாட்டு அறையை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த வருடம் 23.12.2022ம்தேதி முதல் 01.01.2023ம்தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 03.01.2023ம்தேதி முதல் 12.01.2023ம்தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 02.01.2023ம்தேதி அதிகாலை 4.45மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படவுள்ளது. மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். சொர்க்கவாசல் திறப்பன்று மட்டும் பக்தர்களின் கூட்டம் கட்டுங்கடங்காத வகையில் இருக்கும்.

மேற்கண்ட திருச்சி மாநகரின் மிக முக்கியமான திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் ரெங்கவிலாஷ் மண்டபம் அருகில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். திறப்புவிழாவின்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் இந்து அறநிலைய துறை இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மாரிமுத்து , காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இவ்விழா தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், கடந்த 2 வருடங்களாக கொரோனா காலம்கட்டம் என்பதால் பக்தர்கள் வருகை மிக குறைந்த அளவு மட்டுமே இருந்தது. இந்த வருடம் சுமார் 2லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளூர்; மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சுமார் 3000 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவலர்கள் அதிக அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 117சி.சி.டி.வி. கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறத்தில் 92 சி சி டி வி கேமராக்கள் எனெமொத்தம் 209 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்ட்டு வருகிறது.

மேலும் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....