பிரச்சாரத்தில் கைகுலுக்கிய அமைச்சர் நேரு-எச்.ராஜா: தொண்டர்கள் வியப்பு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் நேருவும், எச். ராஜாவும் திடீர் என சந்தித்து பேசினர்.
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள வார்டுகளில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களை ஆதரித்து, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று காலை தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு, பிரச்சார வாகனத்தில் இருந்த படியே பேசிய எச்.ராஜா, தி.மு.க. ஆட்சி காலத்தில் ரவுடித்தனம் செய்தார்கள். கோவில்களை இடிக்கிறார்கள் என்பதற்காக அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தார்கள். அ.தி.மு.க. எப்பவுமே வாயை மூடிக் கொண்டு இருப்பதால், மீண்டும் தி.மு.க.வுக்கு வாக்கு அளித்தார்கள்.
கடந்த 55 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்து உள்ளார்கள். இந்துக்களுக்கு எதிரான தி.மு.க ஆட்சியில், தமிழக அரசின் நிர்வாகம் முழுவதும் மதமாற்றம் செய்பவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். வெறும் இரண்டரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளீர்கள். தூக்கி எறிய வெகு நாள் ஆகாது. தி.மு.க அரசை, இனி மனநலம் குன்றிய அரசு, என்று அழையுங்கள்.
நீங்கள் ஒன்றிய அரசு என்று சொல்லும் பொழுது நாங்கள் மனநலம் குன்றிய அரசு என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள் என்று கூறிவாக்கு சேகரித்தார். தொடர்ந்து, பிரச்சாரம் மேற்கொண்ட எச். ராஜா, எதிரே தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி சூழல் ஏற்பட்டது.
அந்த தர்ம சங்கடமான சூழலில், இருவரும் அரசியல் நாகரீகத்தை கட்டிக்காக்கும் வகையில் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர்.இதை திமுக மற்றும் பா.ஜ.க வேட்பாளர்கள், தொண்டர்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu