ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேர் திருவிழா முன்னேற்பாடு கூட்டம்

அகிலாண்டேஸ்வரி அம்மன் (கோப்பு படம்)
திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேர்திருவிழா வருகின்ற 23.03.2023 அன்று நடைபெறுவதையொட்டி அனைத்துத் துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசியதாவது:-
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேர்திருவிழா 23.03.2023 அன்று காலை 07.00 மணிக்கு துவங்குவதால் 22.03.2023 மற்றும் 23.03.2023 முடிய காவல்துறை பக்தர்களை ஒழுங்குபடுத்துதல், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரளாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து கண்காணிப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களை ஒரே இடத்தில் கூடவிடாமல் தரிசனம் செய்த பக்தர்களை உடனே வெளியேற்றுதல். திருக்கோயில் பகுதிகளில் கூட்ட நெரிசலை சமாளிக்க காவலர்கள் ஷிப்ட் முறையில் பணியமர்த்திட வேண்டும்.
தேரோட்டத்தின்போது தேரோடும் வீதிகளில், தற்காலிக கடைகள் அமைக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேரோட்டம் நடைபெறும் பொழுது தேருக்கு முன்பாகவும், பின்பாகவும் சுமார் 15 அடி இடைவெளி இருக்குமாறும், தேருக்கு இருபுறமும் பக்கவாட்டில் தேர் சக்கரங்களிலிருந்து 7 அடி இடைவெளியிருக்கும் வகையில் பக்தர்கள் எவரும் தேருக்கு அருகில் வராமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் திருக்கோயில் திருத்தேர் அருகில் ஒரு தீயணைப்பு வண்டி மீட்பு மற்றும் முதலுதவி குழுவுடன் 23.03.2023 அன்று காலை 07.00 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை ஆயத்த நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் மெயின்ரோடு, சன்னதிவீதி வடக்கு, தெற்கு பிரகாரம் மற்றும் தேவையான இடங்களில் ஆம்புலன்ஸ், மருத்துவ முகாம், முதலுதவி முகாம்களை தேவையான இடங்களில் ஏற்படுத்த வேண்டும், திருவானைக்காவல் பகுதியில் ஏராளமான பக்தர்கள் நடந்து வருவதால், சாலையை செப்பனிடுதல், சாலையின் இருபுறங்களிலும் குண்டு குழிகள் இன்றி ஒரே சீராக மண் அமைப்பு ஏற்படுத்தி, எளிதாக பக்தர;கள் நடந்து வருவதற்கு ஏற்றவாறு வசதி ஏற்படுத்தி தருதல், பக்தர்களுக்கு ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில், சின்டெக்ஸ் டேங்க் குழாயுடன் நிறுவி, குடிநீர்வசதியும், தற்காலிக கழிவறை வசதியும் ஏற்படுத்த வேண்டும்,
திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்து வசதிகளை 22.03.2023 மற்றும் 23.03.2023 வரை ஏற்பாடு செய்தல், மேலும், அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உணவு பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்திட வேண்டும், அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்க கூடாது. திருக்கோயில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும், தேர்திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும், கோயில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் பேசினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) செல்வம், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், காவல் துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu