திருச்சி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து தம்பதியினர் படுகாயம்
திருச்சி அருகே பலத்த மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.
திருச்சியில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.இதற்கிடையே மழையின் காரணமாக நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் முள்ளிகரும்பூர் மஞ்சாங்கோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த புஷ்பராஜ், ராஜேஸ்வரி என்ற தம்பதி படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் அவர்களுடைய குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தம்பதிக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.பழனியாண்டி மற்றும் தி.மு.க.வினர் ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மாயனூரில் இருந்து முக்கொம்பு மேலணைக்கு அதிகப்படியான நீர்வரத்து உள்ளது. இந்த நீர் கொள்ளிடம், காவிரி ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுகிறது. காவிரி ஆற்றில் 18 ஆயிரத்து 626 கன அடியும், தெற்கு கொள்ளிடத்தில் 48 ஆயிரத்து 852 கன அடியும், வடக்கு கொள்ளிடத்தில் 5 ஆயிரத்து 953 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu