திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு வலைவீச்சு
கொலை செய்யப்பட்ட சிவக்குமார்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து செங்கற்சோலையை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் சிவக்குமார் என்கிற சோலை சிவா (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேசுவரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சிவக்குமார் தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் அடையாளம் தெரிந்த 2 நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளர். பின்னர் அவர்கள் இருவரும், கண் இமைக்கும் வேளையில் தாங்கள் தயாராக கொண்டு சென்ற சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
இதனால், நிலை குலைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்ததும் சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டையொட்டி உள்ள இடத்தை பட்டா போடுவது தொடர்பாகவும், அப்பகுதியில் உள்ள அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் அறக்கட்டளை அமைத்தது குறித்து சிவக்குமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், ரியல் எஸ்டேட் அதிபர் ரவி முருகையா உள்பட 4 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu