திருச்சி அருகே மகளுக்கு அரிவாள் வெட்டு- தந்தை தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே மகளுக்கு அரிவாள் வெட்டு- தந்தை தூக்கிட்டு தற்கொலை
X

தூக்கில் தொங்கிய மூர்த்தி

திருச்சி அருகே காதல் பிரச்சினையில் மகளை அரிவாளால் வெட்டி விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள அதவத்தூர் சக்திநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது 72). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பிருந்தாதேவி. இவர்களது மகன்‌ அருண்.

முதல் மனைவி பிருந்தாதேவி இறந்ததை தொடர்ந்து ‌இரண்டாவதாக லதா என்பவரை மூர்த்தி திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு பிரபாகரன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் மூர்த்தியின் மனைவி லதா தனது மகன் பிரபாகரனுடன் உறவினர் வீட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டிற்குள் மூர்த்தி தூக்கில் தொங்கிய படியும், கீர்த்தனா கை, கால்களில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைக்கண்டு லதா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கீர்த்தனாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தற்கொலை செய்து கொண்ட மூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசாரின்முதற்கட்ட விசாரணையில் கீர்த்தனா ஒருவரை காதலித்தது வீட்டில் தெரிய வந்ததால் மூர்த்தி மகளை வெட்டிவிட்டு தான் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மூர்த்திக்கு 2 மனைவி என்பதால் சொத்து பிரச்சினை ஏதும் உள்ளதா? வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!