திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை செயற்குழு கூட்டம்
திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை செயற்குழு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் 4-வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது அலி முன்னிலை வகித்தார். மாநகர மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்டர், வழக்கறிஞர் அன்புஉட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மத்திய அரசு பெட்ரோல், டீசல், கேஸ்விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும்.நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்டங்களில் மனித உரிமை துறையின் சார்பில் போட்டியிட விரும்பும் தகுதியுள்ள நபர்களுக்கு சீட் வழங்க வேண்டும்.மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டு இருப்பதை கண்டித்தும், பெகாசஸ் கருவி மூலம் மற்றவர்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் செயலை கண்டித்தும் 20-ந்தேதி முதல் வருகிற 30 ந்தேதி வரை அனைவரது இல்லங்களிலும் கருப்புக்கொடி ஏற்றுமாறு பத்தொன்பது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். எனவே மனித உரிமை துறையின் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு சட்டை அணிந்து நமது கண்டனத்தை காட்ட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒரு முறையோ அல்லது மாதத்தில் ஒரு முறையோ அல்லது அவர்களுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை இருக்கிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வந்து அமர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு அயராது பாடுபட்டு தங்களது மகத்தான உழைப்பை அளித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு தேவையான சில உதவிகளையும் அவர்களது பிரச்சனைகளையும், குறைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநில பொறுப்பாளர் பாலாஜி வரவேற்று பேசினார். முடிவில் மாநிலத் துணைத் தலைவர் ரகுராமன் நன்றி கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu