ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு

ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டது.

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் மஞ்சகரை பகுதியில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தின் பின்புறம் அம்பேத்கர் நகர் உள்ளது.இப்பகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 19 வருடங்களாக ஆக்கிரமித்து குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில்இந்த இடத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ 15 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைய உள்ளது.

அதற்குரிய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்கு இடையூறாக அங்கு ஆக்கிரமித்துள்ளவர்கள் குடியிருப்பதால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.இந்நிலையில் மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் திருஞானம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா இளநிலை பொறியாளர்கள் பாலமுருகன் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அங்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.

இதற்கு அப்பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story