திருச்சியில் பலத்த மழையால் விளை நிலங்கள் பாதிப்பு- தூர் வார கோரிக்கை

திருச்சியில் பலத்த மழையால் விளை நிலங்கள் பாதிப்பு-  தூர் வார கோரிக்கை
X

திருச்சியில் பெய்த பலத்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.

திருச்சியில் பெய்த பலத்த மழையினால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் வாய்க்கால் தூர் வார கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உய்யகொண்டானில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம், புலிவலம், சுப்பராயன் பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள பாசன கால்வாய்களிலும், வடிகால் ஓடைகளிலும் மழை நீர் பெருகி வந்தது.

திருச்சி அருகே வாழைத்தோப்பில் தண்ணீர் புகுந்தது.

ஆனால் இந்த மழை நீர் வடிய வழியில்லாமல் கொடியாலம், புலிவலம் கிராமங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. மேலும் இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் நெற்பயிர் நாற்றங்காலில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சம்பா அறுவடை நேரத்தில் பெய்த இதுபோன்ற தொடர் மழையால் சாகுபடி செய்த நெற்கதிர்கள் வயலிலேயே முளைத்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்த ஆண்டு நெல் விதைத்த சில நாட்களிலேயே விதைகள் அழுகி தொடர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் விதைத்தால் அடுத்தடுத்து பெய்யும் மழையால் தொடர் இழப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். இதேபோல் புலிவலம், கொல்லங்காடு, கொடிங்கால் வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பியதால், தொடர்ந்து பெய்த மழையால் திருச்சி மாநகராட்சி அரவானூர், கிழக்கு சண்முகா நகர், லிங்கம் நகர் விஸ்தரிப்பு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்தது.இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கூறியதாவது:-

இந்த பகுதியில் பிரதான பாசன ஆறான உய்யகொண்டான் 2019-20-ல் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டது. இதன் முக்கிய வடிகாலான புலிவலம் மணற்போக்கி வடிகால் 2020-21-ல் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டது. எனினும் இந்த வடிகாலில் கலக்கும் கொடியாலம் பாசன கால்வாய்க்காளான பச்சடி கால்வாய், படித்துறை கால்வாய், செல்லாயி அம்மன் கோயில் கால்வாய்களும், கொடியாலம் வடிகால் ஓடையும் இதேபோல் புலிவலம், சுப்பராயன்பட்டி பாசன கால்வாய் இதன் வடிகால்கள் மற்றும் இப்பகுதியில் கொடியாலம், புலிவலம் இடையே ஓடும் கொடிங்கால் வடிகால் ஓடையிலும் மண்டி கிடக்கும் புல், பூண்டுகள், செடிகொடிகள் உள்ளிட்ட புதர்களை அகற்றி தூர்வார வில்லை.

இதனால், வெள்ள நீர் வடிய வழியில்லாமல் கிராம குடியிருப்புகளுக்குள்ளும், வயல் பகுதிகளிலும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று அந்தநல்லூர் ஒன்றியம் மேக்குடி, கீழ்பத்து பகுதிகளிலும், அரவானூர் பகுதிகளிலும் வயல் பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் வரும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் முன் இப்பகுதிகளில் உள்ள பாசன, வடிகால் ஓடைகளை போர்க்கால அடிப்படையில் தூர் வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்/

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!