ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் 236 கண்காணிப்பு கேமராக்கள்
23ம்தேதி திறக்கப்பட உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பரமபதவாசல்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த விழா ஜனவரி 2-ந்தேதிவரை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. 22-ந்தேதி மோகினி அலங்காரமும், 23-ந்தேதி முக்கியநிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பும் நடைபெறுகிறது.
29-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 30-ந்தேதி திருமங்கை மன்னன் வேடு பறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறக்காவல்நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி நிருபர்களிடம்கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதாசி திருவிழாவில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள். இந்த ஆண்டு சுமார் 2½ லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியூர் காவல்துறைஅதிகாரிகள் மற்றும் போலீசார் 2,500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். பகல்பத்து மற்றும் ராப்பத்தின் போது திருச்சி மாநகர போலீசார் 380 பேர் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை சித்திரைவீதி மற்றும் உத்திரவீதியில் நிறுத்த அனுமதி இல்லை.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 கண்காணிப்பு கேமராக்கள்,கோவிலை சுற்றி வெளிப்புறத்தில் 102 கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 14 கண்காணிப்பு கேமராக்கள் எனமொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை 13-ந்தேதியிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில்ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu