ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பு..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான  4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பு..
X

திருச்சி சிறப்பு முகாம். (கோப்பு படம்).

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நான்கு பேர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில், பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்த நிலையில், அவரை விடுதலை செய்து உச்ச நீதமன்றம் கடந்த மே 18 ஆம் தேதி உத்தரவிட்டது.

பேரறிவாளர் விடுதலை செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த அரசியல் கட்சியினர், அதே போல சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே, சிறையில் இருந்தபடி, நளினி உள்ளிட்டோர் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளின்படி தங்களுக்கும் விடுதலை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களின் அடிப்படையில், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்தும், ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் நளினியும், ரவிச்சந்திரனும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் நான்கு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களின் வருகையை சிறப்பு முகாமின் பொறுப்பு அதிகாரி சப்-கலெக்டர் வேலுமணி முறைப்படி பதிவு செய்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக இவர்கள் 4 பேரும் இங்கு அழைத்து வரப்பட்டதையொட்டி, திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நான்கு பேரும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் வெளிநாட்டினர் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதும், வெளிநாட்டினர் என பதிவு செய்து இந்தியாவில் தங்கி இருப்பதும், இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமுக்கு செல்வதும் அவர்களின் விருப்பம் என்றும், மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் கியூ பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவது வழக்கம். சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் தற்போது சிறப்பு முகாமில் தங்கி உள்ளனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil