தொட்டியம் ஒன்றிய குழு கூட்டம்- கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு

தொட்டியம் ஒன்றிய குழு கூட்டம்- கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு
X

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

தொட்டியம் ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழுத்தலைவர் புனிதராணிமகேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபுசத்தியமூர்த்தி, ஒன்றியஆணையர் ஞானமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாபுசத்தியமூர்த்தி எதுவும் பேசாமல் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க, தி.மு.க மற்றும் சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்கள் பத்துக்கும் மேற்பட்டோரும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.

அப்போது எழுந்து பேசிய ஒன்றிய கவுன்சிலர் அ.தி.மு.க வை சேர்ந்த ஏழூர்பட்டி தங்க.தமிழ்செல்வன் மக்களுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்வதற்காக நாம் ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு கடந்த 21-மாதங்களாக பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை. எனவே வரும் காலங்களில் மக்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு ஏற்ற வழி வகையை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஏற்பாடு செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் எனது பகுதியில் உள்ள பொது மக்களை ஒன்று திரட்டி ஏழூர்பட்டி பேரூந்து நிறுத்தம் அருகே சமூக இடைவெளியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.

தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் தீபா பேசும்போது மக்கள் பணிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான டெண்டரை பாஸ் செய்தால் மட்டுமே வளர்ச்சித் திட்டம் நடைபெறும் தொடர்ந்து கூட்டம் நடைபெறாததால் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே ஒன்றிய குழு கூட்டத்தை முறையாக நடத்தி மக்களுக்கான சேவைகளை செய்ய தொட்டியம் ஒன்றிய ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வசந்த பாரதி பேசும்போது ஒவ்வொருமுறை ஒன்றிய குழு கூட்டத்திற்கு வருவதும் வீண் விவாதங்களில் ஏற்படுவதும் கூட்டம் நடைபெறாமல் திரும்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. கூட்டத்தை நடத்துவதை உறுதி செய்த பின்னர் இனி வருங்காலத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் இல்லையென்றால் எங்களுக்கு அழைப்பு விடுக்கதீர்கள் என ஆணையரிடம் கேட்டுக் கொண்டார்.

ஒன்றியக்குழு தலைவர் புனித ராணி பேசும் போது டெண்டர் பாஸ் வைக்க முடியாத காரணத்தால் வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தின் வரவு, செலவு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

கூட்ட அரங்கை விட்டு வெளியேறிய கவுன்சிலர்களை தவிர்த்து ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்