முசிறி அருகே கோவில் நிர்வாகத்தில் தலையிட அறநிலைய துறைக்கு எதிர்ப்பு

இந்து சமய அறநிலைய துறை தலையீட்டை கண்டித்து முசிறி அருகே கிராம மக்கள் மனு அளித்தனர்.
முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாயி அம்மன், சடச்சாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை, எட்டு ஊர் கிராம மக்கள் பொதுவான கோவிலாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கோவில் பரம்பரை அறங்காவலராக கிராமத்தில் நியமிக்கப்பட்ட முத்துக்கருப்பன் மகன் சீனிவாசன் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் எட்டுப்பட்டி கிராமத்திற்கும் சம்பந்தமே இல்லாத தனி நபர் ஒருவர் அறங்காவலராக வேண்டுமென முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக பரம்பரை அறங்காவாளராக செயல்பட்டு வரும் சீனிவாசன் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அங்கு செல்லவிருந்தனர்.இந்த தகவலை கேள்விப்பட்ட 8 ஊர் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோயில் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிருந்தா நாயகி, நிர்வாக அதிகாரி ராகினி,கோவில் பூசாரி செல்வ முத்துக்குமார் மற்றும் முசிறி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவலர்கள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், பொதுமக்கள் மகா மாரியம்மன் கோயிலை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டிற்கு எடுக்கக் கூடாது, பரம்பரை அறங்காவலராக செயல்பட்டு வரும் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இது குறித்து அதிகாரியிடம் கோரிக்கை குறித்த மனுவினை வழங்கினர்.
இதனை பெற்றுக்கொண்ட அறநிலையத்துறையினர், கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நிறைவேற்றி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வெள்ளூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu