கரும்பு வியாபாரியை கொன்ற போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

கரும்பு வியாபாரியை கொன்ற போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
X
கரும்பு வியாபாரியை கொன்ற போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் கொளக்குடியில் உள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவர் மருதாம்பாள். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி இவரிடம், தொட்டியம் மணல்மேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 53), அவருடைய தம்பி போலீஸ்காரரான தமிழ்செல்வன் (வயது 36) ஆகியோர் காய்கறி வாங்க பேரம் பேசினர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை அங்கு கரும்பு வியாபாரம் செய்து கொண்டு இருந்த மருதாம்பாளின் மகன் தர்மராஜ் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமாரும், தமிழ்செல்வனும் அரிவாளால் தர்மராஜை வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், தமிழ்செல்வன், அரசு, சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். இதில் அரசு தரப்பில் 35 சாட்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயக்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதமும், போலீஸ்காரர் தமிழ்செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இருந்தார். மேலும், இந்த வழக்கில் இருந்து அரசு, சக்திவேல் ஆகியோரை விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!