முசிறி வழக்கறிஞர் அலுவலகத்தில் குட்கா: சீல் வைத்தார் எப். எஸ். ஓ.
குட்கா சிக்கியதை தொடர்ந்து முசிறி வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி பகுதி கைகாட்டி ரோட்டில் உள்ள வழக்கறிஞர் மகாலிங்கம் அலுவலகம், முத்து டீக்கடை, துறையூர் ரோடு தமிழ் செல்வம் மளிகை கடை, சக்திவேல் டீ ஸ்டால், சுந்தரவல்லி பெட்டிக்கடை ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது ஐந்து கடைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கறிஞர் அலுவலகத்திற்கும் அந்த 4 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.இந்த ஆய்வின் போது 1215 கிலோ கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக முசிறி காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் முசிறி அண்ணா நெசவாளர் காலனியில் செந்தில்குமார் ஸ்னாக்ஸ் என்ற கடையில் சமோசா மொத்த விற்பனை செய்வதற்கு அழுகிய காய்கறிகளை கொண்டு சமோசா தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட அழுகிய காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன மேலும் சமோசா தயாரிப்பு நிறுவனத்திற்கும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய பாண்டி, சையத் இப்ராஹிம், செல்வராஜ், மகாதேவன், அன்பு செல்வன் ,வடிவேல் ,கந்தவேல், சண்முகசுந்தரம் ஆகியோரும் மற்றும் ஆயுதப்படை காவலர்களும் உடன் இருந்தனர்.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களோ அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார் புகார் எண்கள் 96 26 83 95 95 மற்றும் 94 44 04 23 22
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu