கவுண்டம்பட்டிக்கு மாற்று பஸ் இயக்க மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை

கவுண்டம்பட்டிக்கு மாற்று பஸ் இயக்க மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை
X

திருச்சியில் குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ் வராததால் தனியார் பஸ்சில் ஏறுவதற்காக சமூக இடைவெளியை மறந்து கூடி நின்ற  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கவுண்டம் பட்டிக்கு மாற்று பஸ் இயக்க மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி வழியாக கவுண்டம்பட்டிக்கு காலையில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தினமும் காலை 8.40 மணிக்கு கவுண்டம்பட்டி வந்து மீண்டும் அதே வழியில் சத்திரம் பஸ்நிலையம் சென்றடையும். இந்த பஸ்சில் திருப்பைஞ்சீலி கிராமத்திலிருந்து திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அந்த அரசு பஸ் வரவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமலும், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். பின்னர் அதற்கு அடுத்து வந்த தனியார் பஸ்சில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணித்தனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் வரக்கூடிய பஸ் பழுது ஏற்பட்டாலோ அல்லது வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டாலோ மாற்று பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story