திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு

திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்த நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் தற்போது திருமணமாகி காஞ்சிபுரம் மாவட்டம் ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகர் செந்தில் ஆண்டவர் தெரு பகுதியில் கணவர் பரமசிவத்துடன் வசித்து வருகிறார். இவரது தந்தைக்கு சொந்தமான நிலம் தொட்டியம் ஏழூர் பட்டியில் உள்ளது.
இதில் 29 சென்ட் நிலத்தை அவரின் தாத்தாவின் சகோதரர் வழி பேரன் பெரியசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளார். பின்னர் அதனை ஏழூர் பட்டி உப்பத்து பள்ளம் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். அதன் பின்னர் செல்லம்மாள் தனது மகள் லோகேஸ்வரி பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்து அதனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்பட்டது.
இதனை அறிந்த கீதா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக உப்பிலியபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் அளித்தார். பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்த பெரியசாமி, அதனை வாங்கிய செல்லம்மாள், மகள் லோகேஸ்வரி, மருமகன் கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேர் மீது திருச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu