வங்கி வாசலில் டிப்-டாப் நபர் பெண்ணிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

வங்கி வாசலில் டிப்-டாப் நபர் பெண்ணிடம்  ரூ.1.15 லட்சம் மோசடி
X
வங்கி வாசலில் பெண்ணிடம் ரூ.1.15 லட்சம் மோசடி செய்த டிப்டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அம்பலகாரன்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சசிகலா (வயது 31). பெங்களூரில் இரும்பு கடையில் வேலை செய்து வரும் சின்னச்சாமி, தனது மனைவியுடன் துவரங்குறிச்சியில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.

அங்கு அடகு வைக்கப்பட்டுள்ள தனது நகைகளை திருப்புவதற்காக ரூ.1லட்சத்து 15 ஆயிரத்தை எடுத்து சென்றுள்ளார். வங்கி வாசலில் மனைவி சசிகலாவை நிறுத்தி விட்டு அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்தை பெற்று கொண்ட சின்னச்சாமி, போஸ்ட் ஆபீஸ் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.

அப்போது வங்கி வாசலில் காத்திருந்த சசிகலாவிடம், வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்த ஒரு டிப்டாப் ஆசாமி, தான் வங்கியில் வேலை செய்வதாக அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார். சசிகலாவிடம் பேச்சு கொடுத்த அவர், வரிசையில் காத்திருக்காமல் உடனே பணம் கட்டி விடலாம் என கூறி சசிகலாவை நம்ப வைத்து,

பணத்தையும் வங்கி பாஸ்புக் வாங்கி கொண்டு வங்கியினுள் சென்றுள்ளார். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் சென்று விட்டு சின்னச்சாமி திரும்பி வந்தபோது,

வங்கி ஊழியர் ஒருவர் பணம் கட்ட சென்றிருப்பதாக சசிகலா கூறவே, இருவரும் கடை வீதிக்கு சென்று விட்டு வரலாம் என புறப்பட்டு சென்று விட்டனர். திரும்பி வந்து பார்த்த பொழுது அந்த டிப்டாப் ஆசாமி மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து துவரங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வாலிபரின் முகம் தெளிவு இல்லாமல் பதிவாகியிருந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு